பதிவு செய்த நாள்
27
மே
2017
11:05
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழ்காவனுார் கிராமத்தில், கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்காவனுார் கிராமத்தில், தென்பெண்ணையாற்றின் தென்கரையில், அய்யனார் கோவிலில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, களஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் உளுந்தாம்பட்டு இம்மானுவேல் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட் டுள்ள சமண தீர்த்தங்கரரின் சிற்பத்தை, அய்யனார் என வழிபட்டுவந்துள்ளனர். இந்த தீர்த்தங்கரர் சிற்பம் 34 செ.மீ., உயரமும், 25 செ.மீ., அகலமும் கொண்டது. கி.பி., 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. தீர்த்தங்கரர்கள் 24 பேரில், இச்சிற்பம் எந்த தீர்த்தங்கரர் என, கண்டுபிடிக்க குறியீடுகள் ஏதும் காணவில்லை. இடது தோளும், மூக்கும் சிதைந்துள்ளது. தலையில் முக்குடை அலங்கரிக்கிறது. கடலுார் மாவட்டத்தில் சமணர் வாழ்விடங்கள், அடையாளங்கள், கோவில் இருந்ததற்கான தடயங்களும் நிறைய உள்ளன. கடலுார், திருவதிகை, நெல்லிக்குப்பம், கீழ்அருங்குணம், வானமாதேவி, திட்டக்குடி, கொங்கராயனுார், கணிசப்பாக்கம் ஆகிய ஊர்களிலும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை ஏற்கனவே வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன், விழுப்புரம் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர், சில ஆண்டுகளுக்கு முன், கணிசப்பாக்கம் கிராமத்தில் கண்டெடுத்த தீர்த்தங்கரர் சிற்பத்தில், கல்வெட்டு இடம் பெற்றிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். கல்வெட்டில், ‘படுவன் பொற்காளி’ என்பவரின் தமக்கை செனக்கத்தி என்பவள், இவ்வூரில் இருந்த தீர்த்தங்கரர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் நடந்து வந்த திருவிழா ஒன்றுக்கு வழங்கியுள்ள பொற்காசு காணிக்கையை பற்றி கூறப்பட்டுள்ளது. அதுபோல், கீழ்காவனுார் பகுதியிலும் தீர்த்தங்கரர் கோவில் இருந்திருக்கலாம் என, ஆய்வில் தெரிய வருகிறது. இவ்வாறு, வரலாற்று ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.