பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
12:06
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், ஸ்தலசயன பெருமாள் கோவில் குளத்தை, துார் வாரி பராமரிக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 108 வைணவத் தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இதன் புனித தீர்த்தமாக, புண்டரீக புஷ்கரணி என்ற திருக்குளம், கடற்கரை சாலையில் உள்ளது. புண்டரீக முனிவர், குளத்தில் மலர்ந்த தாமரை மலரை, இறைவனுக்கு சூடி அருளாசி பெற்றது, இத்தலத்தின் வரலாறு.இறைவன், முனிவருக்காக, கைகளால் கடல்நீரை இறைத்து காட்சியளித்த இத்தலத்தில், கடலிலும், திருக்குளத்திலும் புனித நீராடி, இறைவனை தரிசிக்க வேண்டியது ஐதீகம். இக்குளம், 2 ஏக்கர் பரப்பில், மையத்தில் 25 ச.அடி., பரப்பு நீராழி மண்டபத்துடன் அமைந்துள்ளது.
இயற்கை நீரூற்று மணற்பரப்பில் அமைந்த குளம், 25 ஆண்டுகளுக்கு முன், வற்றாமல் நீர் நிரம்பியிருக்கும். நாளடைவில், குளத்தைச் சுற்றிலும் கட்டடங்கள் உருவாகி, இதன் நீர்வரத்து பாதைகள் அடைபட்டு, குளத்தின் நீர்வரத்து தடைபட்டும், குளம் துார்ந்தும், சேற்று சகதியுமாகவும் சீரழிகிறது. மழைக்காலத்தில் தேங்கும் நீர், சில மாதங்களில் வறண்டு விடுகிறது. குளத்தில் படர்ந்த கொடிகள், வறட்சியின் போது மக்கி, மீன்கள் இறந்து துர்நாற்றமடிக்கிறது. குளத்தில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையும் குவிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, குளத்தில் அமைக்கப்பட்ட பழங்கால படிகளும், சரிந்து ஆபத்தாக உள்ளது. புனித தீர்த்த குள அவலத்தால் அதிருப்தியடைந்துள்ள பக்தர்கள், குளத்தை துார் வாரவும், படிகளை புதுப்பித்து மேம்படுத்தவும், கோவில் நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர்.