பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
12:06
ஆர்.கே.பேட்டை, திருமண முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால், அம்மனுக்கு முதல் அழைப்பிதழை வைத்து வழிபடும் கல்யாண வீட்டாரின் கூட்டம், வெள்ளாத்துாரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வைகாசியை தொடர்ந்து ஆனி மாதத்தில், திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சுற்றம் மற்றும் நட்பு வட்டாரத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் முன், குலதெய்வ கோவிலில் அழைப்பிதழை வைத்து வழிபடுவது திருமண வீட்டாரின் வழக்கமாக உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் உள்ள வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள், இந்த திருமண சீசனில், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை நடந்த சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். இதில், திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளவர்கள், தங்கள் வீட்டு கல்யாண அழைப்பிதழை, முதலில் அம்மனிடம் வைத்து வழிபாடு நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று, 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், திருமண அழைப்பிதழை அம்மன் காலடியில் வைத்து வழிபட்டனர். ஆடி மாதத்தில் முகூர்த்தம் இல்லாவிட்டாலும், ஆவணி மாதத்தில் முகூர்த்தம் நிச்சயித்துள்ளவர்களின் வருகையால், சில வாரங்களாக, கோவிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.