பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
01:06
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், 35.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், சிறிய கோவில் திருப்பணிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. நலிவடைந்த கோவில்களுக்கு, 2,500 ரூபாய் மதிப்பிலான, பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு ஆகிய பூஜைப்பொருட்களும் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்துக்கு, நடப்ப ஆண்டில், 370 கோவில்களுக்கு பூஜை பொருட்களும், 38 கோவில்களுக்கு திருப்பணி மானியத்தையும், அரசு ஒதுக்கியுள்ளது. அவிநாசி தாலுகா நீங்கலாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கான உதவி வழங்கும் விழா, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மொத்தம், 340 கோவில்களுக்கு, 9.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூஜை பொருட்களும்; 26 கோவில்களுக்கான திருப்பணி உதவியாக, 26 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்ஷினி வரவேற்றார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கோவில்களுக்கான உதவியை வழங்கினார். ஈரோடு எம்.பி., செல்வக்குமார சின்னையன், எம்.எல்.ஏ.,க்கள், விஜயகுமார், நடராஜன், குணசேகரன், இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.