பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
11:06
சென்னை: சென்னை காளிகாம்பாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ‘ஓம் சக்தி’ கோஷத்துடன் வடம் பிடித்தனர். சென்னை, தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ளது, காளிகாம்பாள் உடனுறை கமடேசுவரர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, பாரதியார் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர். முற்காலத்தில், உக்கிரகாளியாக காட்சியளித்த இக்கோவிலின் உற்சவர் காளிகாம்பாள், தற்போது சாந்த சொரூப காமாட்சி அவதாரமாக காட்சியளிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
சிறப்பு அபிஷேகம் இக்கோவிலின் வைகாசி மாத பிரம்மோற்சவவிழா, மே 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும், அம்பாள் காமதேனு வாகனம்; இரட்டை தலை சிம்ம வாகனம்; ரிஷப வாகனம்; யானை வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நாளான நேற்று, தேர் திருவிழா, வெகு சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை, உற்சவர் காளிகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 7:30 மணிக்கு, அம்பாள் தே ரில் எழுந்தருளினார். காலை, 8:30 மணிக்கு, திரளான பக்தர்கள் பங் கேற்று, ‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷத்துடன் தேர் வடம் பிடித்தனர். தேரில் வீதிகளை வலம் வந்த அம்பாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 11:30 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தது. ஜூன் 6ல், ஸ்ரீ சக்ர கிண்ணித்தேர் தேரோட்டமும்; ஜூன் 7ல், நடராஜர் உற்சவம், தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஜூன் 8 முதல், விடையாற்றி உற்சவம் துவங்குகிறது.