பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
12:06
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று விடுமுறை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். திருத்தணி நகரில் உள்ள, 150க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் திருமணம் நடந்தது. இதனால், திருமணத்திற்கு வந்தவர்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணிகள் என, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், முருகன் மலைக்கோவிலில் குவிந்தனர். மலைக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், பொது வழியில், மூலவரை தரிசிக்க, பக்தர்கள் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்றவர்களும், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலாவும் நடந்தது. மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.