பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
12:06
ஆர்.கே.பேட்டை: கவுரவர்களில் மூத்தவரான துரியோதனன் நேற்று நடந்த, 18ம் நாள் குருஷேத்திர போரில், பீமசேனனால் வீழ்த்தப்பட்டார். வெற்றி பெற்ற பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜாவுக்கு இன்று மகுடம் சூட்டப்படுகிறது.ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி, பகாசூரன் குப்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து துவங்கியது. அர்ச்சுனன் தபசு, விராட பருவம், அரவான் கள பலி, ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளில், நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.பஞ்சபாண்டவர்கள் உடனான குருஷேத்திர போரில், தன் சகோதரர்கள் 99 பேரையும் இழந்த துரியோதனன், நேற்று காலை, தானே களத்தில் இறங்கி போரிட்டார். நீண்ட யுத்தத்திற்கு பின், பீமசேனன், துரியோதனனை கொன்றார்.
கவுரவர்கள் சபையில், துரியோதனனால், அவமானப்படுத்தப்பட்ட திரவுபதியம்மன், துரியோதனன் குருதியை எடுத்து, தன் கூந்தலில் தடவி சபதத்தை நிறைவேற்றினார். அதே நேரம் தன் மூத்த மகனை இழந்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை ஆவேசமாக அடித்து விரட்டினார். புத்திர சோகத்தில் அழுது புலம்பினார்.தெருக்கூத்து கலைஞர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியை காண, செல்லாத்துார், வேலன்கண்டிகை, ஸ்ரீகிருஷ்ணாபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரளான பக்தர்கள் தீமிதித்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.அதை தொடர்ந்து பிரம்மாண்ட வாண வேடிக்கையும், இசைக்கச்சேரியும் நடந்தது. இன்று காலை, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.