பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
12:06
கோவை : வரதராஜபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழ்வேத முறைப்படி நடந்த, கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். வரதராஜபுரம் மாரியம்மன் கோவிலில், ஐந்து நிலை ராஜ கோபுரம், உள் மண்டபம், காலபைரவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த, 1ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகம் துவங்கியது.
யாகசாலை பூஜையில், முதற்காலவேள்வியும், பேரொளி வழிபாடுகளும் நடந்தன. தொடர்ந்து, யாக சாலையில் வைக்கப்பட்டிந்த புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மாரியம்மன், செல்வ விநாயகர், திருமுருகன், காளத்திநாதர், நவகிரகங்கள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பேரூராதீனம் அம்பலவாணர் அருள்நெறி மன்றத்தினை சேர்ந்த, செயபிரகாசு தலைமையில் தமிழ் வேத முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூர் ஆதீன இளையபட்டம் மருதாசல அடிகளார், காமாட்சிபுரிஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன் மணிவாசக அடிகளார் ஆகியோர் அருளாசி வழங்கினர். விழாவில், ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.