திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை வைகாசி விசாக பால்குட திருவிழா நடக்கிறது.கோயிலில் மே 29ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விசாக திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் நாளை நடக்கிறது. பல்வகை அலகு குத்தி வரும் பக்தர்கள், பால்குடம் சுமந்துவரும் பக்தர்கள் வசதிக்காக கோயிலில் ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கம்பத்தடி மண்டபம் வழியாக நந்தியை சுற்றிவந்து விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை அபிஷேகத்திற்கு பால் வழங்கி தரிசிக்கவும், மடப்பள்ளி மண்டபம் வழியாக வெளியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை பிடித்துச்செல்ல வசதியாக சுவாமியின் பீடத்திலிருந்த வள்ளி தேவசேனா மண்டபம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 6:00 மணிக்கு சுவாமி விசாக கொறட மண்படத்தில் எழுந்தருளுவர். சாதாரண தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வழக்கமான பாதையிலும், சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கம்பத்தடி மண்டபம், இரட்டை விநாயகர் மண்டபம் வழியாகவும் மூலஸ்தானம் சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.