பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
10:06
மதுரை: திருப்பரங்குன்றம், பழநி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் மற்றும் அடிப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவத்துடன் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். பழநியில் இத்திருவிழாவை முன்னிட்டு, மலைகோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டனர். முன் தேரின் மீது பழங்களையும், நவதானியங்களையும் பக்தர்கள் வீசினர்.
திருச்செந்தூரில் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்றகால பூஜைகள் தொடர்ந்தன. விழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் மற்றும் அடிப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். கால்நடைகள், நவதானியங்களை கோயிலுக்கு தானமாக வழங்கினர்.