பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
12:06
லக்னோ : உ.பி.,யில், மனித தலையுடன் பிறந்து, உடனே உயிரிழந்த கன்றுக்குட்டியை, கிராம மக்கள், விஷ்ணுவின் அவதாரம் எனக்கூறி வழிபாடு நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில், பா.ஜ., வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்குள்ள முசபர் நகர் அருகே, பச்சண்டா என்ற கிராமத்தில், பசு ஒன்று, கன்றை ஈன்றது; முழுமையாக வளர்ச்சியடையாத அந்த கன்று, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. அதன் தலை, கண்கள், காதுகள் மனிதர்களை போல இருந்தன. அதை பார்க்க கிராம மக்கள் திரண்டனர். உடனடியாக, அந்த கன்றுக்குட்டியின் உடலை, கண்ணாடி பெட்டிக்குள் வைத்த மக்கள், இந்து தெய்வமான மகா விஷ்ணு, மீண்டும் பிறந்துவிட்டதாகக் கூறி, வழிபாடு நடத்தினர்; சிறப்பு பூஜைகளும் நடந்தன. அந்த கன்றுக்குட்டியின் உடலை வழிபட, ஏராளமானோர் திரண்டதால், அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் வயிற்றில் இருந்து, மகா விஷ்ணு அவதரித்துள்ளார். எனவே, நாங்கள் வழிபடுகிறோம் என்றனர். இது குறித்து, கால்நடை மருத்துவர் அஜய் கூறுகையில், கன்று கருவில் இருந்த போது, பல்வேறு காரணங்களால் வளர்ச்சி அடையவில்லை. இதனால், மனித உருவம் போன்று தோன்றுகிறது. இதை கடவுளின் அவதாரம் எனக்கூறுவது, மூடநம்பிக்கையே, என்றார். மனித உருவம் கொண்ட அந்த கன்றுவின் உடலை எரித்து, அதன் மீது கோவில் கட்ட, அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.