திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2017 12:06
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பத்து நாள் விழாவாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. மே29ல் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் திருத்தளிநாதர்-சிவகாமி அம்பாள் திருவீதிஉலா நடந்தது.
நேற்று காலை முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் ேசாமஸ்கந்தர்-பிரியாவிடை, மூன்றாவது தேரில் சிவகாமி அம்மன் ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து மூன்று தேர்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மாலை 4:00 மணி அளவில் கிராமத்தினர் கோயில் திருநாள் மண்டபத்தில் கூடினர். கோயில் ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் நடுத்தேரில் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்து மாலை 5:10 மணிக்கு தேருக்கும் வடம் பிடித்தனர்.
முதலில் விநாயகர் தேரும் தொடர்ந்து இரண்டாவது தேரையும் பக்தர்கள் வடம் பிடித்தனர். விநாயகர் தேரை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்துச் சென்றனர். தேரோடும் வீதிகளில் மூன்று தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தெருக்களில் நீரால் கழுவி கோலமிட்டு தேர்களை பக்தர்கள் வரவேற்றனர்.நாளை காலை 10:20 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில்தீர்த்தம் வழங்குதலும்,இரவில் தெப்பக்குள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளலுடன் வைகாசி விசாக விழா நிறைவடைகிறது.