Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சத்ருக்ணன்
சத்ருக்ணன்
எழுத்தின் அளவு:
சத்ருக்ணன்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
05:06

ராமருடைய கடைசி தம்பி சத்ருக்ணன்! லட்சுமணனுடன் பிறந்த இரட்டைப் பிறவி. வால்மீகி ராமாயணம் சத்ருக்ணனை விஷ்ணுவிடைய அம்சா அவதாரமாகக் கூறுகிறது. ராமருக்கு எப்படி லட்சுமணனோ, அதேபோல் பரதனுடன் சத்ருக்ணன் பின்னிப் பிணைந்தவர் -சத்ருக்ணன் பேசுவது குறைவு. ஆனால் அவர் சிறந்த நிர்வாகி என்கிறது ராமாயணம். நாட்டு பரிபாலனம், மக்களின் தேவைகள் என அனைத்தையும், பரதன் சார்பாக மேற்கொண்டவர் சத்ருக்ணன். உண்மையைப் பேசுபவர்...!

அண்ணன் பரதனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் துணிபவர்! லட்சுமணன் மாதிரியே சத்ருக்ணனுக்கும் கோபம் அதிகம். அண்ணன் ராமன் மீது அபரிமிதமான அன்பு கொண்டவர். இதனை பல இடங்களில் நிருபித்தவர். ராமாயணத்தில் சத்ருக்ணன் பற்றி தேடித்தான் படிக்க வேண்டும்! ராமனுக்குத் திருமணம் நடந்தபோது மற்ற தம்பிகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருந்தும் திருமணம் முடிந்த, சில மாதங்களில், பரதன், தன் மாமன் வீட்டிற்குப் புறப்பட்டபோது, பரதனுடன் சத்ருக்ணனும் சென்றுவிட்டதாகப் புராணம் கூறுகிறது.

பிறகு தசரதன் இறந்த செய்தி கேட்டு, பரதனுடன் சத்ருக்ணன் நாடு திரும்புகிறார்! ராமனும், சீதையும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றது கேட்டு, மிகவும் வருந்துகிறார். அதே சமயம் தன் அண்ணன் லட்சுமணன் மீது அவனுக்குக் கடும் கோபம் வருகிறது! அப்பா... அம்மாக்களை, சிறைபிடித்தாவது, ராமன் காட்டிற்குச் சென்றதைத் தடுத்திருக்க வேண்டாமா? எனக் கோபம் கொள்கிறார்! இதனை பரதனுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்தச் சமயத்தில், மந்தரை, அமர்க்களமாய் ஆடை அலங்காரங்களை அணிந்து கொண்டு வருகிறாள். இதனைப் பார்த்த சத்ருக்ணன் கடும் கோபம் கொள்கிறார்! மந்தரையின் முடியைப் பிடித்து இழுத்து முற்றத்துக்கு வேகமாக அழைத்து வருகிறார். இதனைப் பார்த்த கைகேயியின் தோழியர், கைகேயிடம் சென்று நடந்ததைக் கூறுகின்றனர்! உடனே கைகேயி வந்து சத்ருக்ணனிடம், மந்தரையை விடுவிக்கும்படி சொல்கிறாள்! அந்தக் கைகேயியையும் கடிந்து கொள்கிறார் சத்ருக்ணன்! அவர் மனம், மந்தரையை கொல்லத் துடிக்கிறது. அப்போது பரதன் அங்கு வருகிறார். பெண்களைத் துன்புறுத்துவது சரியல்ல. இதனை ராமன் கேள்விப்பட்டால், உன் மீது கோபம் கொள்வான்...! மந்தரையை விட்டுவிடு என சத்ருக்ணனுக்கு ஆலோசனை கூறுகிறார்!

உடனே சத்ருக்ணன் சாந்தம் அடைந்து மந்தரையை விட்டு விடுகிறார்! இதன்பின், ராம - சீதா - லட்சுமணனை திரும்ப அழைத்து வர, பரதனுடன், சத்ருக்ணன் சொல்கிறார். அவர்தான் சித்ர கூடத்தில் ராமர் தங்கியிருந்த இடத்தை முதலில் கண்டு பிடிக்கிறார். பிறகு ராமனை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, பரதனுடன் அழைக்கிறார். பிறகு பரதனுடன், ராமனுடைய பாதுகையைப் பெற்று, நாடு திரும்ப எத்தனிக்கும்போது, ராமன் சத்ருக்ணனை அழைக்கிறார். ராமனுக்கு, மந்தரை, கைகேயியை சத்ருக்ணன் கடிந்து கொண்ட தகவல் தெரிய வந்து விடுகிறது! இதனால். நீ அன்னை கைகேயிடம் அன்பு பாராட்ட வேண்டும் ஒருபோதும் கோபித்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி அனுப்புகிறார்! பிறகு பரதனுடன், சத்ருக்ணன் நாடு திரும்புகிறார். பரதன், நாட்டின் பரிபாலனத்தை சத்ருக்ணனிடம் ஒப்படைக்கிறார். இதன்பின் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள்.. ராமர், இலங்கையிலிருந்து திரும்பும் போதுதான் தெரிய வருகிறது. அனுமார் வந்து பரதனிடம், ராமனின் வருகையைத் தெரிவிக்கிறார். உடனே, பரதன் தம்பி சத்ருக்ணனை அழைத்து, பிரமாதமாக வரவேற்க ஏற்பாடு செய் என்கிறார்.

இதற்காக வழிகளை செப்பனிட்டு, கட்டிடங்களை அலங்கரித்து நகரை அழகு மிக்கதாக, சத்ருக்ணன் மாற்ற ஏற்பாடு செய்தார் என்கிறது ராமாயணம்! பிறகு மீண்டும் சத்ருக்ணன் பற்றி, லவணாஸுரன் கொடுமைகள் பற்றி ரிஷிகள் புகார் கூறும்போதுதான் அறிகிறோம்....! பட்டாபிஷேகம் முடிந்து, பல ஆண்டுகள் கழிந்து, லவணாஸுரன் கொடுமைகள் பற்றி அறிந்த ராமன், அவனைக் கொல்ல பரதனை அனுப்ப யோசிக்கிறார். அப்போதுதான் சத்ருக்ணன் அண்ணன் ராமனிடம் அந்த வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறார். தம்பியின் வேண்டுதல் கேட்டு மகிழ்ந்த ராமன், ஆஹா, நீயே அதற்குச் சிறந்தவன். நீயே அவனைக் கொல்! அதே சமயம் உன்னை மது நாட்டின் அரசனாக பட்டாபிஷேகம் செய்விக்கிறேன் என்கிறார்! மது நாடுதான் லவணாஸுரன் ஆண்ட பகுதி! அந்த அசுரனைக் கொன்றதும், தனக்கு அந்த நாட்டின் மன்னர் பதவி தரப்படும் என ராமன் கூறியதைக் கேட்ட சத்ருக்ணன், தன்னுடைய பண்பை வெளிப்படுத்துகிறார்.

நான் லாவணாஸுரனைக் கொல்கிறேன் என்று கூறியது என் வீரத்தை வெளிப்படுத்தத்தான்! என் அண்ணா பரதன், முதலில் அதனை ஆளட்டும்! அதற்குத் தாங்கள் உத்தரவிட்டாலே மகிழ்வேன் என்கிறார்! ஆனால் ராமரோ, வென்றவனே... அரசாளவேண்டும். ஆக வென்றால் நீதான் மகுடம் சூட்டிக் கொள்ள வேண்டும். இது ராமனின் உத்தரவு. மறுப்பு கூறாதே.... என தம்பியை மடக்கி, ராமன் பெரும் படையை சத்ருக்ணனுடன் அனுப்பி வைக்கிறார். இந்த இடத்தில் ஒன்றை நினைவு கூறுவது நல்லது. சீதை கர்ப்பமாக இருக்கும் சூழலில், ராமனால் காட்டிற்கு அனுப்பப்படுகிறாள். அவள் அங்கு வால்மீகி ஆசிரமத்தை சரணடைகிறாள். இந்த வால்மீகி ஆசிரமத்திற்கு சத்ருக்ணன் ராமர் படையுடன் வந்து ஒருநாள் தங்குகிறார். அப்போது சீதைக்கு லவகுசர்கள் பிறக்கின்றனர். பிறகு ஏழு நாட்கள் பயணம் செய்து யமுனை நதிக்கரையில் இருந்த சயவன மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அங்கு லவணாசுரன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்கிறார்! பிறகு சத்ருக்ணன் கடும்போர் புரிந்து கடைசியில் அவனை தன்னுடைய அம்பினால் கொல்கிறார். அனைவரும் அவனை வாழ்த்துகின்றனர்.

பிறகு மதுவுக்கு மன்னனாகி, புதிய மதுராவை உருவாக்குகிறான்! ஆமாம் இன்றைய மதுரா சத்ருக்ணனால் நகரமாக உருப்பெற்றதாகும்...!! பனிரெண்டு வருடங்கள் ஆண்ட பின், அயோத்தி நோக்கி வருகிறார். வழியில் மீண்டும் வால்மீகி ஆசிரமத்தில் தங்குகிறார். அப்போது லவகுசர்கள் ராமனின் கதையை இசையாக்கிப் பாடுவதை கேட்கிறார். பிறகு அயோத்தி சென்று ராமரை சந்திக்கிறார்... ராமருடனேயே வாழ விரும்புகிறார்! அவரோ, க்ஷத்திரிய தருமம், ராஜபரிபாலனம் செய்வது தான்! ஆக தொடர்ந்து மதுராவை தான்! ஆள்வதே சரி. அதனைக் கடமையாகக் கொண்டு செயல்படு என அனுப்பி விடுகிறார்! பிறகு சத்ருக்ணன் பற்றி எப்போது மீண்டும் அறிகிறோம்? ராமர், தனக்குக் கடைசி காலம் வந்து விட்டதை உணர்ந்து கொள்கிறார். இதனை அறியும் சத்ருக்ணன், தன் னுடைய இரு மகன்களுக்கும் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, ராமனைத் தேடி வருகிறார்.

பிறகு..

ராமன் சரயு நதியில் இறங்கி, மூழ்கும் போது, அவரைப் பின்பற்றி, சத்ருக்ணனும் மூழ்கிவிடுவதாக ராமாயணம் கூறுகிறது. சத்ருக்ணன், மதுராவை நீண்ட நாள் ஆண்டார் என்ற வரலாறு இன்றும் அங்கு பேசப்படுகிறது.  இந்த சத்ருக்ணனுக்கு, இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டுமே கோயில் உள்ளது.  

சத்ருக்ணன் கோயில் - பாயம்மல் -திருச்சூர் ஜில்லா (கேரளா)
முனிக்கேஷ் - இது ரிஷிகேஷ் ரெடி பகுதியில் உள்ளது.
கன்ஸ்டிலா அருகில் - மதுரா - உத்தரப்பிரதேசம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar