திருச்செந்தூரில் வைகாசி விசாகம் லட்சக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2017 12:06
தூத்துக்குடி, திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடினர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 29ல் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்குஅபிசேக, ஆராதனைகள் நடந்தன.
வைகாசி விசாக திருநாளான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகமும் 2.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜையும் சண்முகருக்கு சிறப்பு அபிசேகமும் நடந்தது. பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி, வசந்தமண்டபத்தை அடைந்தார். அங்கு அபிசேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி, வசந்தமண்டபத்திற்கு சென்றார். அங்கு முனிக்குமாரனுக்கு சாபவிமோசனமளித்து பின்னர் கோயிலை அடைந்தார். வைகாசி விசாக திருவிழா, எளிய பக்தர்களின் விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்றைய நிகழ்வில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர். பாதயாத்திரை, காவடி உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதிகாலையில் இருந்தே திருச்செந்தூர் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.