பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
11:06
கோவை : ரத்தினபுரியிலுள்ள குட்டிமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ரத்தினபுரி மருதக்குட்டி வீதியில் குட்டிமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் மராமத்துப்பணிகள் நிறைவடைந்து, கோவில் முழுக்க வண்ணச்சாந்து பூசி, கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு, மங்களஇசை, கோபூஜை, விநாயகர் பூஜை, பூர்ணாஹூதியோடு வேள்விச்சாலை பூஜைகள் நிறைவடைந்தது.காலை 9:00 மணிக்கு, குட்டிமாரியம்மனுக்கு கோபுர கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்டது. அஷ்டபந்தன மருந்தும் சாத்தப்பட்டது. நேற்று காலை விநாயகர் பூஜை மற்றும், மஹா பூர்ணாஹூதியோடு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. யாகசாலையில் வைக்கப்பட்ட கும்பங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து விமான கோபுர கலசம் முன்பு எழுந்தருளச்செய்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுரகலசங்கள் மீது, புனிதநீரை சிவாச்சாரியர்கள் ஊற்றினர். சுவாமிக்கு மகாஅபிஷேகம், மகாதீபாராதனையும், சிறப்பு அன்னதானமும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.