பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
12:06
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகத்தில் ஆரிய வைசிய சமூகத்திற்கு பாத்தியமான நுாற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் மற்றும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் பக்தர்கள் முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள வரதராஜபெருமாள், பாலமுருகன், கருடாழ்வார், நவகிரகம், சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் சன்னதிகள் புனரமைக்கப்பட்டது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து வெங்கடேச சாஸ்திரிகள், வேத பண்டிதர் பாலாஜி தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் துவங்கியது. சீனுவாச பெருமாள் கோவிலில் இருந்து புண்ணிய தீர்த்தம் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. முற்பகல் 11:20 மணிக்கு மணிகண்ட ஆனந்த நாராயணன் சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
கன்னிகாபரமேஸ்வரி தேவஸ்தான தலைவர் பாண்டுரங்கன் செட்டியார், ஆரியவைசிய சமாஜ தலைவர் அபரஞ்சி செட்டியார் முன்னிலையில், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீயணைப்பு வாகனம் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் சுவாமிகளுக்கு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. ஆரியவைசிய சமூகத்தினர், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சர்வ அலங்காரத்தில் உற்சவர் மூர்த்தி திருவீதியுலா நடந்தது.