புதுச்சேரி: பாகூரில் 2000 ஆண்டுகள் பழமையான மூலநாதர் கோவிலில், அன்னதான திட்டம் துவக்க வேண்டும் என, காங்., எம்.எல்.ஏ., தனவேலு கோரிக்கை வைத்தார். சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் நடந்த விவாதம்: தனவேலு: பாகூரில் உள்ள மூலநாதர் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தேரோட்டத்தை முதல்வரும், கவர்னரும் சேர்ந்து வடம் பிடித்து தொடங்கி வைப்பது மரபு. தஞ்சை பெரிய கோவிலைவிட பழமையானது. எனவே புதுச்சேரி அரசு அறிவித்துள்ள ஆன்மிக சுற்றுலா திட்டத்தில் பாகூர் சிவன் கோவிலை சேர்க்க வேண்டும். கோவில் அன்னதான திட்டத்தையும் இக்கோவிலில் அமல்படுத்த வேண்டும். முதல்வர் நாராயணசாமி: பாகூர் சிவன் கோவில் மத்திய அரிசன் தொல்லி யல் துறையின் கீழ் வருகிறது. எனவே, தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த பணியும் செய்ய முடியாது. அத்துறையிடம் அனுமதி கேட்போம், கிடைத்தால் உடனடியாக ஆன்மிக சுற்றுலா திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்னதான திட்டத்திற்கு மாநில அரசு நிதியுதவி ஏதும் தராது. கோவில்களில் வரும் வருமானத்தை வைத்து அறங்காவலர் குழு நிர்வாகிகள் செயல்படுத்த வேண்டும். அமைச்சர் கந்தசாமி: பாகூர் சிவன் கோவில் மிக பழமையானது. எனவே அங்கு அன்னதான திட்டத்தை கொண்டுவர வேண்டும். முதல்வர் நாராயணசாமி: கோவில் நிர்வாக குழு ஒத்துழைத்தால் பாகூர் சிவன் கோவிலிலும் அன்னதான திட்டம் கொண்டு வரப்படும்.