பதிவு செய்த நாள்
10
ஜூன்
2017
12:06
திருப்போரூர்: சிதம்பர சுவாமிகள் மடத்தில், 358ம் ஆண்டு குரு பூஜை விழா, 7ம் தேதி கொண்டாடப்பட்டது. திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டது. சிறந்த தவஞானியான சுவாமிகள் சமராபுரி,யுத்தபுரி என்றழைக்கப்படும் திருப்போரூரில், பெண் பனை மரத்தடியின் கீழ்சுயம்பு மூர்த்தியாக தோன்றிய வள்ளி தேவசேனை சமேத முருகப்பெருமானை வெளியே கொணர்ந்து, புனராவர்த்தனம் செய்து கோவில் எழுப்பினார். பின், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, பக்தர்களுக்கு விபூதி அளித்து பல நோய்களை தீர்த்தும், திருப்போரூர் சன்னதி முறை என்ற, 726 பாடல்களை பாடியும், நித்திய பூஜைகளை செய்தார். வைகாசி விசாகம், பவுர்ணமி நாளில், மடத்தில் உள்ள ஒடுக்கத்தில் சென்று, கந்தபெருமானுடன் இரண்டற கலந்தார். இந்நிகழ்வை நினைவூட்டும் வகையில், 358ம் ஆண்டு குரு பூஜை விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், காலை, 10:00மணிக்கு, சிதம்பர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் செய்யப்பட்டன. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு சிதம்பர சுவாமிகளின் உற்சவமூர்த்தி, கந்தசுவாமி கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.