பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
12:06
பொன்னேரி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த மஹோற்சவ விழாவில், அக்னி பிரவேசத்தில், பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டு சென்றனர். பொன்னேரி அடுத்த, பள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் தர்மராஜா சுவாமி கோவிலில், மஹோற்சவ விழா, 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில், பரத நாட்டியம், சிலம்பாட்டம், அர்ச்சுனன் தபசு மற்றும் மகாபாரதத்தில் ஒரு பகுதி நாடகம் என, பல்வேறு நிகழ்ச்சிகளும், கருடசேவை, தேர் உற்சவம் என, அம்மனுக்கு உற்சவங்களும் நடந்தன. நேற்று முன்தினம், மாலை, 6:00 மணிக்கு, காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதிக்கும் அக்னி பிரவேச விழா வெகு விமரிசையாக நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். அகரம், தேவம்பட்டு, சேகண்யம், புதுகுப்பம், நெல்வாயல் உள்ளிட் கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர். இரவு, திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.