பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
01:06
பழநி;பழநி முருகன் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்குமேல் வருமானம் வந்தும், போதிய பணியாளர்கள் இல்லாததால் பக்தர்களை திருப்திபடுத்த முடியாமல் நிர்வாகம் திணறுகிறது. தமிழக கோயில்களில் பழநிமுருகன் கோயிலில் மாதந்தோறும் உண்டியலில் ரூ.1.5 கோடிக்கு மேல் வசூலாகிறது. அதுவே பங்குனி உத்திரம், தைப்பூசம்போன்ற நாட்களில் ரூ.2கோடி வரை வசூலாகிறது.
இதுதவிர ரோப்கார், வின்ச், தங்கரதம், தங்கத்தொட்டில், தரிசனம், காலபூஜை, பஞ்சாமிர்த விற்பனை போன்ற இனங்கள் மூலமும் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இத்தனை வருமானம் வந்தும், எழுத்தர்கள், கண்காணிப்பாளர்கள், ஓதுவார்கள் என நுாற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.
புதிய அதிகாரி கவனிப்பாரா: பாதுகாப்பில் குளறுபடி: பழநி கோயிலில் தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படுகின்றனர். அவர்களில் தகுதியில்லாத நபர்களை நியமிப்பதால் பக்தர்களுடன் அடிக்கடி தகராறு நடக்கிறது. அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்காததால் பக்தர்களிடம் வசூலில் ஈடுபடுகின்றனர். ’போலி’கைடுகள்: மலைக்கோயிலுக்கு தனியாக கைடுகள் இல்லை. இருப்பினும் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன், பாதவிநாயகர் கோயில் பகுதியில் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ஒருகும்பல் பக்தர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது.
ஆக்கிரமிப்புகள்: பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். பாதவிநாயகர் கோயில் அருகே ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் செலவு செய்கின்றனர். முறையான கண்காணிப்பு இல்லாததால் உடனே ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.
கிடப்பிலுள்ள திட்டங்கள்: பழநிகோயில் கழிவுநீரில் இருந்து பயோ காஸ் தயாரிக்கும் திட்டம், இடும்பன் மலைக்கோயிலைச் சுற்றி கிரிவலப்பாதை, பாலாறு அணையில் இருந்து கோயிலுக்கு குடிநீர் கொண்டு வருதல், வள்ளிச் சுனை சீரமைப்பு, பட்டத்து விநாயகர் திருமணமண்டபம், நவீன இரண்டாம் ரோப்கார், நவீன வின்ச் அமைக்கும் திட்டம் உள்பட ரூ.200 கோடிக்கும் மேலான பயனுள்ள பல திட்டங்கள் துவங்கியும், சில பணிகள் துவக்கப்படாமலும் கிடப்பில் உள்ளன.
கும்பாபிஷேக பணிகள்: தைப்பூச திருவிழா நடக்கும் பெரியநாயகியம்மன் கோயிலில் ரூ.90லட்சம் செலவில் கும்பாபிஷேக பணிகள் துவங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதேபோல ஆயக்குடி சோளீஸ்வரர், பாலசமுத்திரம் அகோபிலவரதராஜப்பெருமாள்கோயில் திருப்பணிகள், மாரியம்மன்கோயில் தேர் போன்ற பணிகளும் முடிக்கப்படாமல் உள்ளன. பள்ளி, கல்லுாரிகள், பாலிக்டெக்னிக்குகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். புதிய இணை ஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே பகதர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.