பதிவு செய்த நாள்
17
நவ
2011
01:11
சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி எனப்படுவார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு செல்லும் வகையில், 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக தகுதியுள்ளவர்கள். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன்மாருக்கு மாலை அணிவிக்கலாம். வீட்டில் தனி அறை அமைத்து சபரிமலை சீசன் அல்லாத நாட்களில்கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.
குருசாமிகளுக்கு வேண்டுகோள்!
1. ஐயப்பன் அருளாலும், தன்னுடைய நெறியான விரத மகிமையினாலும் பல பக்தர்கள் வாழ்வில் மிக உன்னதமான நிலைக்கு வந்துள்ளனர். பகவானுக்கு அடுத்தபடியாக என்றும் அவர்கள் நினைவுகூர்வது, அவர்களுக்கு ஐயப்ப பக்தியை அறிமுகப்படுத்தி நல்வழி காட்டிய குருசாமிகளைத்தான்!
2. குருசாமிகளாக இருப்பவர்கள், தான் எல்லா வகையிலும் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழவேண்டும்.
3. கன்னிசாமிகளுக்கும் மற்ற சீடர்களுக்கும் ஐயப்பன் பெருமையைப் பற்றியும், சபரிமலை யாத்திரையின் உயர்வைப் பற்றியும், விரதத்தை நெறியாக, முறையாகக் கடைப்பிடித்தலின் அவசியம் பற்றியும் எடுத்துச்சொல்லி, அவர்களைச் சரியான வழியில் நடத்திச் செல்லுதல் உத்தமம் ஆகும்.
4. எந்தவிதமான சுயநலத்துக்கும் உட்படாமல், ஐயப்பனுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் சேவை செய்வது, மிகவும் அவசியமானதும் போற்றக்கூடியதும் ஆகும்.
5. குறைந்தது பத்து கன்னிசாமிகளையாவது முறையாக விரதத்தை 41 நாட்களுக்குக் கடைப்பிடிக்க வைத்து, ஐயப்ப பக்திநெறியைப் புரியவைத்து, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் அவர்களை மட்டும் பிரத்யேகமாக சபரிமலைக்கு அழைத்துச் சென்று வருவதை, 18 படிகளைக் கடந்த குருசாமிகள் ஒரு நோக்கமாகக் கொள்ளுதல் மிகவும் பாராட்டத்தக்க சேவையாகும்.