பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
01:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஏரிக்கோடி பகுதியில், 800 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த, 26ல் கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, பிரவேச பலி நடந்தது. 27 காலை கோபூஜை, யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, நாடிசந்தனம், வேதோபசாரம் நடந்தது. காலை, 10:15 மணிக்கு காலபைரவர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கிலிகானப்பள்ளி, பையம்பட்டி, புதுபேயனப்பள்ளி, போகனப்பள்ளி, பச்சிகானப்பள்ளி, பையனப்பள்ளி, திப்பனப்பள்ளி, செம்படமுத்தூர், மரிக்கம்பட்டி, சஜ்ஜல்பட்டி, கம்மம்பள்ளி, ஓதிகுப்பம் உட்பட, 151 கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ரவிக்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், கோபிநாத், பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மேலாளர் கூத்தரசன், பெங்களூர் தொழிலதிபர் ரகுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.