பதிவு செய்த நாள்
19
நவ
2011
10:11
ராஜபாளையம் : ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில், மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு, சாப்பிட்ட இலை மீது நடந்த அங்கப்பிரதட்சணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, நேற்று காலை முதல், சுவாமி மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அன்னம் படைக்கப்பட்ட பின், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சாப்பிட்ட இலையை வரிசையாக அடுக்கி, அதில் பக்தர்கள், "ஓம் நமசிவாய கோஷமிட்டபடி அங்கப்பிரதட்சணம் செய்தனர். பின், இலைகளை தலையில் சுமந்து குப்பைத் தொட்டியில் போட்டு நேர்த்திக்கடனை முடித்தனர்.
மீனாட்சி, செங்கோட்டை கூறுகையில், ""28 ஆண்டாக கலந்து கொள்கிறேன். பஞ்சாப், புனே, சென்னையில் உள்ள எனது உறவினர்களும் கலந்து கொண்டனர். இலையில் அங்கப்பிரதட்சணம் செய்கிறேன் என இறைவனிடம் வேண்டினால், எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும், என்றார்.
மகாதேவ அஷ்டமி அன்னதான கமிட்டி செயலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""அன்னம், உயிர், ஆத்மா தொடர்பை உணர்த்துவதற்காக 157 ஆண்டுகளாக அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. மகாதேவ அஷ்டமி எனும் வைக்காஷ்டமி பூஜை பிரசாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தால், வியாதிகள் தீரும், என்றார்.