பதிவு செய்த நாள்
10
ஜூலை
2017
10:07
மதுரை: ராமகிருஷ்ண மடத்தில் நேற்று (9ம் தேதி) குரு பூர்ணிமா விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் காலை 7.30 மணிக்கு மணிக்கு வேத பாராயணம், விசேஷ பூஜை, பஜனை, அஷ்டோத்தரசத நாம பாராயணம், ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
இந்த விழாவில் குரு தத்துவம் என்ற தலைப்பில் மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பின்வருமாறு சொற்பொழிவாற்றினார். இந்துமதத்திற்குத் தொண்டு செய்தவர்களில் ஒரு முக்கியமான இடம் பெற்றிருப்பவர் வியாச பகவான். குரு பூர்ணிமா வி யாசர் அவதரித்த நாள் என்பதால் 1. வியாச பூர்ணிமா, 2.வியாச பூஜை ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வியாசர் வேதங்களை நான்காக வகுத்தார். அதனால் அவர் வேத வியாசர் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாபுராணங்கள், நுட்பமான ஆன்மிகத் தத்துவங்களைக் கூறும் பிரம்மசூத்திரங்கள் ஆகியவற்றை நமக்கு அருளியவர் அவர்தான். மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் பகவத்கீதை. எனவே பகவத்கீதை நமக்குக் கிடைப்பதற்கும் வியாசர்தான் காரணம். இந்தியா முழுவதும் அவரவர் குருவை நினைத்து, குரு பூர்ணிமா கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. குருவும் தெய்வமும் ஒரு பக்தனுக்கு இரண்டு கண்கள் போன்றவர்கள்; ஒரு காகிதத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவர்கள். ஆச்சாரியனை உடையவன் ஞானம் பெறுகிறான் என்று உபநிஷதம் கூறுகிறது. யார் வேண்டுமானாலும் குரு ஆகிவிடமுடியாது. திருஞானசம்பந்தர், சுவாமி விவேகானந்தர் போன்று இறைவனின் ஆணை பெற்றவர்கள்தான் குருவாக முடியும். குரு என்பதற்கு, அக்ஞானத்தை நீக்குபவர் என்பது பொருள்.
சத்குருவின் அருளில்லாமல் ஒருவர் பிறவிக்கடலைக் கடக்க இயலாது. சிவபக்தர்கள் தட்சிணாமூர்த்தியை தங்கள் குருவாக ஏற்றுக்கொள்வது வழக்கம். அதுபோல் வைஷ்ணவர்கள் ஹயக்ரீவரை குருவாக ஏற்று ஆன்மிக வாழ்க்கை வாழ்கிறார்கள். உலக வரலாற்றில் மிகச் சிறந்த குரு, மிகச் சிறந்த சீடர் என்பதற்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர். இறைவனின் மந்திரத்தை ஜபம் செய்வது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. எரிகிற விளக்குதான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும். அதுபோல் மெய்ஞ்ஞானம் பெற்ற ஒரு குரு வால்தான், சீடர்களின் அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானம் பெறச் செய்ய முடியும். குருவருள்தான் திருவருளைப் பெற்று தருகிறது. விழாவின் முடிவில் பக்தர்கள் சுமார் 750 பேருக்கு பகலுணவு பிரசாதம் வழங்கப்பட்டது.