பதிவு செய்த நாள்
10
ஜூலை
2017
12:07
சேலம்: ”சேலம் மாவட்ட இந்துசமய அறநிலைய அதிகாரிகள் செய்த தவறை மறைக்க, கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி பண்டிகையை நிறுத்திவிட்டனர்,” என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். சேலம், சாந்தாஸ்ரமத்தில், கோட்டை மாரியம்மன், டாலர், சக்கரம், அம்மன் கை காப்பு ஆகியவை வெளியீட்டு விழா, வக்கீல் ரஜினி செந்தில் தலைமையில், நேற்று நடந்தது. அப்போது, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், கோட்டை மாரியம்மனின் டாலர், சக்கரம் ஆகியவற்றை, அறநிலைய துறை தான் வெளியிட வேண்டும் என்பது இல்லை. பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே வெளியிடப்படுகிறது. இதற்கு எதிராக, அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம். அறநிலையத் துறை அதிகாரிகள், தாங்கள் செய்த தவறை மறைக்க, கோவில் கருவறையை பூட்டி, ஆடி பண்டிகையை நிறுத்திவிட்டனர். இதற்கு, எதிராக போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இறையன்பர்களை, அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.