சதி அனுசூயா மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி, தன்னிடமே வைத்துக் கொண்டிருந்தாள். இதனால், முத்தொழிலும் தடைப்பட்டு உலக இயக்கம் செயலற்று விட்டது. அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோர் இந்திரனுடன் அனுசூயாவின் இல்லத்துக்கு வந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் தங்களுடன் அனுப்பி வைக்குமாறு வேண்டினர். மூன்று தேவியரையும் கண்டு வெட்கி நாணமுற்ற மும்மூர்த்திகள், வீட்டின் பின்புறமுள்ள வாழைத் தோட்டத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். அனுசூயா, ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்தாள். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்திலுள்ள தாமரையில் வீற்றிருப்பதால் பிரம்மனுக்கு பூவன் என்றொரு பெயர் உண்டு. எனவே, பூவன் என்று அழைத்தவுடன் பிரம்மதேவன் தான் ஒளிந்துகொண்டிருந்த மரத்திலிருந்து வெளிப்பட்டு ஓடி வந்தார். அதனால், அந்த மரத்தில் பழுத்த பழங்களுக்கு பூவன் பழம் என்று பெயர் ஏற்பட்டது.
அடுத்து, முகுந்தா என்று அழைக்க, அவர் மறைந்ததிருந்த மரத்தின் பழங்களுக்கு மொந்தன் பழம் என்றும் அடுத்த பேயாண்டி என்று அழைக்க, அந்த மரத்துப் பழங்களுக்கு பேயன் பழம் எனவும் பெயர்கள் ஏற்பட்டன. இதைக்கண்ட இந்திரனும், ஒரு வாழை மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். எதிர்பாராதவிதமாக ராமபிரான் அவ்வழியே வர, பயந்துபோன இந்திரன் அகலிகை சாபம் பெறுவதற்குக் காரணமான தன்னை ராமபிரான் கொன்று விடுவார் என்று நினைத்து, நான் இந்திரன் இல்லை என்று அலறி அவர் முன் பணிந்தான். அதனால் அந்த மரத்துப் பழங்களுக்கு, நேந்திரம் பழம் என்று பெயர் ஏற்பட்டது.