மானாமதுரை: மானாமதுரை ஆனந்த வல்லிஅம்மன் சோமநாதர் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொடிமரத்திற்கு முன்பாக இருந்த எவர்சில்வரிலான 4 அடி உயர உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடினர். இந்நிலையில் கொள்ளையடித்த உண்டியலை மானாமதுரை மேல்கரை கல்லறை தோட்டத்திற்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றுக்குள் கொள்ளையர்கள் போட்டுச் சென்றுள்ளனர். இதனை நேற்று முன்தினம் மாலை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,அவர்கள் வந்து உண்டியலை கைப்பற்றி அதில் இருந்த கைரேகை மாதிரிகளை எடுத்து சென்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.