பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
01:07
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் விழாக்கள், கும்பாபிஷேகம், ஊர் திருவிழா நடத்தும் போது கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என சக்திவேல் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளைகளை தடுப்பதிலும், அவ்வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தவும் எஸ்.பி., ஆர்வம் காட்டி வருகிறார். பலஊர்களில் கோயில்விழா, கும்பாபிஷேகம் போன்ற மக்கள் கூடும் விழாக்களில், பெண்களிடம் நகை பறிப்பு நடக்கிறது. கூட்டத்தில் ஊடுறுவும் சமூகவிரோதிகள் பக்தர்கள் போர்வையில் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால் திண்டுக்கல் எஸ்.பி., விழாக்கள் நடத்துவோருக்கு புதிய உத்தரவை அறிவித்துள்ளார். இதன்படி அனைத்து கோயில் விழாக்கள், கும்பாபிஷேகம், ஊர்த்திருவிழா நடக்கும் போது எஸ்.பி., அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும். மேலும் அந்த விழாக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திருடர்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்குவோரையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்பதால் இந்த நடைமுறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.