வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காளியம்மன் கோயில்களில் வருடாந்திர உற்ஸவ விழா விமரிசையாக நடந்தது. தெற்குத்தெரு காளியம்மன் கோயில் விழா காப்புக்கட்டுடன் துவங்கியது. உற்ஸவ அம்மன் கருவறையில் வைக்கப்பட்டது. மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கரக ஊர்வலம் துவங்கியது.
பெரியஊரணிக்கரையில் கரக அம்மன் உருவாக்கப்பட்டு வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பெண்கள் கோயிலில் நின்று பாதபூஜை செய்து வரவேற்றனர். கரகஅம்மன் கோயிலில் எழுந்தருளல் நடந்தது. இரண்டாம் நாள் காலையில் பெண்கள் கரக அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். உச்சிகால பூஜைகளுக்கு பின் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்தும், உருவ பொம்மைகளை சுமந்தபடியும் ஊர்வலம் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் விஸ்வப்பிராமணாள் தெருவில் அமைந்துள்ள காளியம்மனுக்கும் உற்ஸவ விழா நடந்தது. முதல்நாள் காப்புக்கட்டு வைபவம், கரகம் எடுத்துவரும் வைபவம் நடந்தது. இரண்டாம் நாளில் பெண்கள் பொங்கல் படையல் வழிபாடு , கும்மியடி வழிபாடு நடந்தது. மாலையில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி , முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.