பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் ஆளவந்தீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படாததால், பக்தர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் காவிரி கரையோரத்தில், ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அமைப்பானது, பழையஜெயங்கொண்டம் பகுதியில் ஒரு கோவிலும், மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு கோவிலும், மேட்டு மகாதானபுரத்தில் ஆளவந்தீஸ்வரர் கோவிலும் புதிதாக கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதில், ஆளவந்தீஸ்வரர் கோவில் மட்டும், தற்போது புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதால், சிதலமடைந்து காணப்படுகிறது. கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. இந்துஅறநிலையத்துறை சார்பில், ஒருகால பூஜை மட்டும் நடக்கிறது.
இதுகுறித்து, மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், சோழர்கள் ஆட்சி புரிந்த போது, மூன்று சிவன் கோவில்களை கட்டினர். அதில், ஒன்று பழைய ஜெயங்கொண்டம் சோழப்புரத்தில் உள்ள சிவன் கோவில். அரசின் நிதி உதவியுடன் கோவில் கட்டப்பட்டு கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. அதேபோல், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள விஸ்வநாதன் சுவாமி கோவிலும் சீரமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. ஆனால், மேட்டு மகாதானபுரத்தில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான ஆளவந்தீஸ்வரர் கோவில் மட்டும், முறையாக பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். பாழடைந்த நிலையில் காணப்படும் கோவிலை, புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.