மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2017 10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 25 முதல் ஆக.,3 வரை நடக்கிறது.ஆடிப்பட்டம் தேடி விதை என்பதால் விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைத்து சாகுபடி பணிகளை மேற்கொள்வர். விளை நிலங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவர். மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு மட்டும் முக்கிய விழாக்களான ஆடியில் முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழியில் எண்ணெய் காப்பு திருவிழா நடக்கிறது. இதில் ஆடி முளைக்கொட்டு திருவிழா அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் ஜூலை 25ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஆக.,3 வரை நடக்கிறது.
மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலையில் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். நாதஸ்வர வித்வான்கள் கொட்டு மேளம் இசைத்து அம்மனை சேர்த்தி சேர்ப்பர். ஏழாம் நாள் திருவிழாவான ஜூலை 31 இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.