பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
10:07
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரம் மோற்சவ தீர்த்தவாரி, அய்யங்குளத்தில் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், தட்சணாயண புண்ணிய காலம் என அழைக்கப்படும், ஆனி பிரம்மோற்சவம், 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று, அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.பின், கோவிலில் இருந்து உற்சவ மூர்த்தி, விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், அய்யங்குளக்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, அய்யங்குளத்தில் மதியம், 1:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.