சபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள் தொடங்கியது. வரும் 21-ம் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். ஆடி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறந்தது. அன்று பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று(ஜுலை 17) அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமமும், வழக்கமான நித்ய பூஜைகளும் நடைபெற்றது.
வரும் 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களில் மாலையில் தீபாராதனைக்கு பின்னர் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். தினமும் மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபபூஜை நடைபெறும். 21ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாதம் பிறந்ததை அடுத்து பம்பையில் அகண்ட நாம ஜெபம் தொடங்கியது. ஐயப்ப சேவா சங்க தலைவர் முன்னாள் எம்.பி. பாலகிருஷ்ணபிள்ளை இதனை தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.