பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 6:00 மணிக்கு, உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில், அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும், 25 வரை, தினமும் காலை, இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், விநாயகர், மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிப்பர். வரும், 26 காலை, கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு காமதேனு வாகனத்தில் வீதி உலாவும், நள்ளிரவில் அம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழாவும் நடக்க உள்ளது.