பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
11:07
விருதுநகர்: ஆடி வந்தாலேஅம்மன் வழிபாடு என கோயில்களில் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பர். இருக்கன்குடியில் மாரியம்மன்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயில் மற்றும் பெரிய மாரியம்மன் கோயில், ராஜபாளையம் மாயூர நாத சுவாமி கோயில் என சிறப்புமிக்க அம்மன் கோயில்களுக்கு ஆடியில் செவ்வாய், வெள்ளி என வாரம் இரு கோயில் என்றபடி வணங்க துவங்கிவிடுவர். அடி பெருக்கு அன்று பெண்கள் தாலி கயிறு மாற்றிக்கொண்டு அம்மனை வழிபடுவர். இந்த மாதத்தில் வரும் ஆடி கார்த்திகை, அமாவாசை, பிரதோஷம், சங்கரடஹர சதுர்த்தி சிறப்பு பெற்றதாகும்.
*ராஜபாளையம் போன்ற விவசாய பகுதிகளில் ஆடி 18 அன்று பல்வேறு அமைப்பினர், வீட்டு தோட்டம் உருவாக்கும் வகையில், காய்கறி, கீரை விதைகளை இலவசமாக வழங்குவர். இதற்கென ஒரு விழாவே நடத்தி நகரின் முக்கிய பிரமுகர்கள், விவசாயிகளை அழைத்து கருத்துக்களை பகிர்ந்துகொள்வர். இதன் மூலம் இயற்கை உரம் தயாரித்தல், வீடுகளில் தோட்டம் அமைத்துல், மாடி தோட்டம் அமைத்தல் போன்ற விழிப்புணர்வை வித்தியாசமான முறையில் ஏற்படுத்துவர்.
* ஆடிக்கென மற்றொரு சிறப்பும் உண்டு. ஆடி வந்தாலே ஜூவல்லரி முதல் ஜவுளி வரை தள்ளுபடி அறிவிப்பு வெளிவர துவங்கிவிடும். ஆடிக் காற்றில் தள்ளாடாமல் செல்லும் நுகர்வோர்கள் கூட, இந்த மாத தள்ளுபடி அறிவிப்பை பார்த்து ஆடிவிடுவர். எந்த கடைக்கு சென்றாலும் தள்ளுபடி உண்டா, இல்லையா என கேட்டுவிட்டு தான் கடைக்குள் காலடி எடுத்து வைப்பர். அந்தளவிற்கு ஆடி தள்ளுபடி நுகர்வோரை மனதை ஆக்கிரமித்துள்ளது. சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் தீபாவளிக்கு எடுக்கவேண்டிய ஜவுளியை கூட தற்போது எடுத்துவிடுவர்.