பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
11:07
மேட்டூர்: தட்சிணாயன புண்ய கால, துவக்க நாளான நேற்று, மேட்டூர் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். தை முதல் ஆனி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் உத்ராயண புண்யகாலம், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்யகாலம் என அழைக்கப்படுகிறது. உத்ராயண காலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் வடக்கு திசைக்கு இடையே உதயமாகும். தட்சிணயான புண்யகாலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு இடையே உதயமாகும். பாரதத்தின் கங்கை, யமுனை, கிருஷ்ணா, நர்மதை, காவிரி உள்பட, ஏழு நதிகள் சப்த புண்ய நதிகளில், காவிரியில் மட்டுமே தட்சிணாயன புண்யகாலம் துவங்கும் ஆடி மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தட்சிணாயன புண்யநதி என்ற பெருமை, காவிரிக்கு மட்டுமே உண்டு. தட்சிணாயன புண்யகாலம் துவங்கும், ஆடி, 1ம் தேதியான நேற்று, மேட்டூரில் பக்தர்கள் காவிரியாற்றில், புனித தண்ணீரை தலையில் தெளித்து வழிபட்டனர். திருமணத்துக்கு பின், வரும் முதல் ஆடியை புதுமண தம்பதியர் தலைஆடியாக கொண்டாடுகின்றனர். தலைஆடியை முன்னிட்டு, நேற்று புதுமண தம்பதியர்களும் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடினர். எனினும், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் காவிரியில் புனித நீராட வரும் பக்தர்கள், புதுமண தம்பதியர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.