பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
11:07
திருப்பூர்: திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் மற்றும் கல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், ஜெ.கிருஷ்ணாபுரத்தில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் வீரர்களுக்கு நடுகல் உள்ள நிலையில், அதிசயமாக இப்பகுதியில், பெண்களுக்கு நடுகல் வைக்கப்பட்டுள்ளது.மூன்றே கால் அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட இந்த நடுகல், ஆயர் குல பெண் ஒருவரின் நடுகல் என தெரியவந்துள்ளது. பெண் சிலைக்கு இரு புறமும் மாடுகளுடன் காணப்படும் பெண் உருவமும், வலது கையில் கம்பு போன்ற சிறிய ஆயுதம், காது, கழுத்து பகுதியில் அணிகலன், கையில் காப்பு, உடை என அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.
விண்ணுலகம் : இப்பகுதியில் இறந்த இருவர், ஓடம் போன்ற ஒன்றில் விண்ணுலகம் செல்வது போலவும், குதிரைகள் நீர் அருந்துவதற்கு பயன்பட்ட கல் தொட்டி ஒன்றும் காணப்படுகிறது. இது குறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:சேரர்களின் மேற்கு கடற்கரையையும், பல்லவர், சோழர், பாண்டியர்களின் கிழக்கு கடற்கரையையும் இணைக்கும் வகையில், வணிக பெருவழி அமைத்துள்ளனர். அவ்வாறு அமைந்த திண்டுக்கல்- --- பாலக்காடு வழியில், பல்லடம் அருகே ஜெ.கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. சமூகத்துக்கு, சிறந்த சேவை, கால்நடைகளை விலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் வீரச்செயல் புரிந்து, உயிர் நீத்தவர்களுக்கு, நடுகல் அமைக்கும் வழக்கம், 2,500 ஆண்டுகளாக இருந்துள்ளது. அவ்வகையில், கி.பி., 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால, வீர மங்கை நடுகல், ஜெ.,கிருஷ்ணாபுரத்தில் கிடைத்துள்ளது.
மாடு : கால்நடை மேய்ப்பு தொழில் செய்த பெண்ணுக்கு நடுகல் வைக்கப்பட்டு, சிலையில் இரு புறமும், மாடு உள்ளது. சிகை அலங்காரம், காது, மார்பில் அணிகலன், கையில் காப்பு, ஆடை அமைப்பு என அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ளது. வீர மகளிர் நடுகல், மாடுகளுடன் கிடைத்துள்ளது சிறப்பானதாகும். இதற்கு அருகிலேயே, இறந்த இருவர், வாகனத்தில் விண்ணுலகம் செல்வது போல், ஒரு நடுகல் காணப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த, திப்பு சுல்தானின், குதிரை லாயம் இக்கிராமத்தில் இருந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இங்கிருந்த குதிரைகள் நீர் அருந்துவதற்காக, கல்லால் உருவாக்கப்பட்ட தொட்டி ஒன்றும் உள்ளது. இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.