பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
12:07
நாமக்கல்: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் தேங்காய் சுட்டு, கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் ஆடி முதல் நாளான நேற்று இளம் தேங்காயில் அவுல், பொட்டுக் கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை வைத்து, மஞ்சள் பூசிய பின், சிலமணி நேரம் ஊறவைத்து சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்களும் தீயில் சுட்டு, விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று சுவாமி முன் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, தேங்காயுடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் பண்டிகையை கொண்டாடினர்.