பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
தஞ்சாவூர்: ஆகஸ்ட், 3ல், ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நிலையில், காவிரியில் தண்ணீர் வருமா என, விவசாயிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவிரிக் கரையோர மக்களால் ஆடி அமாவாசையும், ஆடிப்பெருக்கும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்று குடும்பத்தோடு, காவிரியில் புனித நீராடுவர். காவிரி, தமிழகத்தில் காலடி பதிக்கும் ஒகேனக்கல் முதல், வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை, இந்த நீராடல் நடைபெறும்.குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு புஷ்ப மண்டபம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்களில், அன்றைக்கு மட்டும் ஏராளமானோர், புதிதாக திருமணமான தம்பதியரும் புனித நீராடுவர். ஆடி, 18ல், காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமண தம்பதியர், மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆகஸ்ட், 3ல், ஆடிப்பெருக்கு விழா வருகிறது. அன்று காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
அதே நேரம், தற்போது, காவிரி ஆறு வறண்டு பாலைவனமாக காட்சி தருகிறது. அத்துடன் கரூர், திருச்சி மாவட்டங்களில் காவிரி ஆறு முழுவதும் படுபாதாளமாக காணப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 20 அடி, 30 அடி ஆழத்தில், மணல் அள்ளப்பட்டு உள்ளது. இந்த பள்ளங்கள் நிரம்பவே, பெருமளவு தண்ணீர் தேவைப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில், வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால், ஏறத்தாழ, 2 டி.எம்.சி.,க்கு சற்று அதிகமான தண்ணீர் காலியாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில், மேட்டூர் அணையில், 5.75 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. ஆகவே, பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, ஆடிப்பெருக்குக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.