பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
திருப்போரூர் கந்தசுவாமி பெருமானுக்கு வெள்ளித்தேர் ஏற்படுத்த, அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில், விண்ணில் போர் புரிந்து, தாருகன் என்ற அசுரனின் ஆணவத்தை அழித்த கோவிலாக கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. அறுபடை வீட்டிற்கு நிகராக போற்றப்படும் இக்கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், குரு பூஜை, மகத்தான காவடிகளுடன் மாசி விழா மற்றும் மாதம் தோறும் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.மேலும், மழைநீர் வருவதற்கு ஏற்ப தனி கட்டமைப்புடன் கூடிய சரவணப் பொய்கை குளம், இதுவரை தண்ணீர் இன்றி வற்றியது கிடையாது என்ற பெருமை கொண்டதாக விளங்குகிறது.
காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மற்றும் வட மாவட்ட மக்களின் பிரதான பிரார்த்தனை தலமாக இக்கோவில் விளங்குவதால் பக்தர்களின் உண்டியல் காணிக்கை, துலாபாரம், முடி காணிக்கை, அபிஷேகங்கள், அர்ச்சனைகள், நில வாடகை, நிலம் வைப்பு வட்டி என ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கோவிலாகவும் விளங்குகிறது.இங்கு, 50 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்த மரத்தேர், 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வரான ஜெயலலிதா உத்தரவால், செப்பனிடப்பட்டு, 2006ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது.அதன் பின், 2010ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில், ஒரு கோடி மதிப்பில் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு, 2011ம் ஆண்டு துவங்கி பக்தர்கள் விருப்ப நாளில் தேரோட்டம் நடைபெறுகிறது.தற்போது, கோவிலில் மாதம்தோறும் உண்டியல் எண்ணுதல் மற்றும் விசேஷ பிரார்த்தனை காணிக்கை மூலம், பல நுாறு கிலோ வெள்ளி சேர்ந்துள்ளது.அந்த வெள்ளியை பயன்படுத்தி, வெள்ளித்தேர் ஏற்படுத்த, அறநிலையத்துறை நிர்வாகமும், ஆட்சியாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், ஆன்மிக அன்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.