பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
05:07
பதினெட்டாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்த ஒரு மகான் ஏக்நாத். அவர் பண்டரிபுரத்து கண்ணன் மீது அளவிலா காதல் கொண்டு ஓடிசாவில் வாழ்ந்து வந்தார். நாள் முழுவதும் பண்டரிநாதனை போற்றி பணிவதும், பாக்கள் இயற்றுவதும் ஆன்மீக பக்தர்களுக்கு கண்ணனைப் பற்றிய உயர்வான கருத்துக்களை உவந்து சொல்வதும் அவருடைய வழக்கமாகும். அதனால் பக்தர்கள் பலர் அவரைப் போற்றி வணங்குவதோடு அவரது கொள்கைகளையும் கடைபிடித்து வாழ்ந்தனர்.
மகானின் பெருமை: இன்பம் என்றால் துன்பமும் உண்டு. நன்மை என்றால் தீமையும் உண்டு. இது இறைவனின் இயற்கை. ஏக்நாதரின் பெருமையையும் அவரை நாடிச் செல்லும் மக்கள் மீதும் ஒரு சிலர் பொறாமை கொண்டனர். மற்றும் ஏக்நாதருக்கு சிறிதளவு கூட கோபம் வராது என்பதையும் அறிந்தனர். எப்படியாவது அவரை கோபப்படுத்தி அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார். அதற்குரிய காலத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தனர். ஒருநாள் மாலையில் கோதாவரி ஆற்றில் குளித்து இறைவனை வணங்கி கரை ஏறி வந்து கொண்டிருந்தார். பொறாமை பிடித்த நால்வர் அவர் அருகில் வரும்போது எச்சிலை அவர் மீது காரி உமிழ்ந்தனர். ஏக்நாதரோ எவ்வித சலனமும் இன்றி மீண்டும் கோதாவரியில் குளித்து விட்டு திரும்பி வந்தார். மீண்டும் அவர் மீது எச்சிலை துப்பினர். மீண்டும் குளித்து வந்தார். இவ்வாறு நால்வரும் 27 முறை அவருக்க கோபம் வரும்படியாக எச்சிலை துப்பினர். மகான் ஏக்நாதரும் பொறுமையின் சின்னமாக மீண்டும் மீண்டும் குளித்து கரை ஏறி வந்தார்.
நால்வரும் சலித்து போய் அம்மகான் இடத்தில் நாங்கள் நால்வரும் உம் மீது 108 முறை எச்சிலை துப்பியும் சிறிதும் கோபம் கொள்ளாது கோதாவரியில் குளித்து வந்தீர்களே? உங்களால் எப்படி இது முடிந்தது! என்று கேட்டனர். அதற்கு அம்மகான் எனக்கு நீங்கள் மிக உயர்ந்த நன்மை அல்லவா செய்தீர்கள். நான் தினமும் இரு முறை மட்டுமே ஸ்நானம் செய்வேன். உங்களின் பேருதவியால் இன்று கோதாவரியில் 108 முறை ஸ்நானம் செய்து 108 முறை இறைவனை வழிபடச் செய்த மகான்கள் அல்லவா நீங்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார். பொறாமை கொண்ட நால்வரும் மனம் மாறி அவர் காலில் பணிந்து தங்கள் தவறை மன்னிக்கக் கோரினர். தவிர அன்று முதல் அவரது சீடர்களாகவும் மாறினர் எல்லா உயிர்கள் இடத்திலும் அன்பு கொண்டால் ஆண்டவனின் அருளைப் பெறலாம்.