பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
12:07
சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில், கற்பூர தீபத்துக்கு தடை விதித்து, நெய் தீபத்துக்கு அனுமதி அளித்து, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சேலம், குமாரசாமிப்பட்டி, அரசு கல்லூரி நுழைவு வாயில் அருகே, எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவில் சுற்றுச்சூழல் நலன் கருதி, ஆடி, 1 முதல் கற்பூர தீபத்துக்கு தடை விதித்து, நெய் தீபத்துக்கு அனுமதி அளித்து, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது: எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில், நெய் தீபம் கொண்டு வழிபாடு நடத்துவதே, வழக்கத்தில் இருந்து வந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பூசாரிகள் கற்பூர தீபத்தை ஏற்றி வந்தனர். பக்தர்கள் வழங்கும் கற்பூரம் தரமானதாக இல்லாததால், கோவில் கட்டடம், மூலவர் அம்மன் சிலை மாசடையும் நிலை ஏற்பட்டது. கோவில் நலன் கருதி, நேற்று முன்தினம் முதல் கற்பூர தீபத்துக்கு தடை விதித்துள்ளோம். நெய் தீபம் ஏற்றப்படுவது தொடரும். பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது குறித்து, விழிப்புணர்வு பேனர் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.