பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, திருத்தணிக்கு, போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், காவடி எடுத்து சென்ற பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். நடப்பு ஆண்டு, ஆடி மாதத்தில், இன்றும், ஆக., 15ம் தேதியும் என, இரண்டு ஆடி கிருத்திகை வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, சில முருக பக்தர்கள், திருத்தணி முருகனுக்கு, நேற்று பரணி காவடி எடுத்தனர். திருத்தணி செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தனர். ஆனால், அங்கு திருத்தணி செல்லும் அரசு பேருந்துகள் இல்லாததால், நீண்டநேரம் வெயிலில் காத்திருந்தனர். திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆக.,15ல், ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுவதால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இருப்பினும், ‘வழக்கமான அளவில் பேருந்துகள் இயக்க ப்பட்டன’ என, போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.