பதிவு செய்த நாள்
23
நவ
2011
10:11
திருநெல்வேலி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதியதாக 2 நுழைவாயில்கள் அமைக்க அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்காக உள்துறையில் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு பகுதியில் உள்ள நுழைவாயில் இரு பக்கமும் கல் வைத்து குறுகிய நிலையில் உள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இரண்டு நுழைவாயில்கள் புதியதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நுழைவு வாயில்கள் ஜெயந்தி நாதர் சன்னதிக்கு எதிர்புறமும், மகா மண்டபத்தில் உள்ள நடராஜர் சுவாமி சன்னதிக்கு எதிர்புறமும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆணையை ரத்து செய்ய கோரி பாலசுப்பிரமணிய ஆதித்தன் அரசில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலைய ஆட்சி துறை ஆணையர் கடிதத்தில், ""திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகா மண்டபம் தெற்கு நுழைவு வாயில் வழியாக மகா மண்டபத்திற்கு சுவாமி தரிசனம் öச்ய வருவார்கள். திருக்கோயிலின் உள்ளே சுப்பிரமணிய சுவாமி சன்னதி மற்றும் சண்முகர் சன்னதி அமையப் பெற்ற மகா மண்டபத்தில் தற்போது பக்தர்கள் உள்ளே செல்வதற்கு தெற்கு புறம் ஒரு வழியும், வெளியில் செல்வதற்கு கிழக்குபுறம் ஒரு வழியும் உள்ளது. இவ்வழிகளில் உள்ளே சென்று வெளியில் வருவதற்கு பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். உள்ளே செல்லும் இவ்வழியில் ஒரே சமயத்தில் பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள், சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளே சென்று வர வேண்டியுள்ளது. இவ்வழியில் தினம் அதிக நெரிசல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு எதிராகவும், சண்முகர் சன்னதிற்கு நேராகவும் இரண்டு நுழைவாயில்கள் உள்ளது. இம்மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஜெயந்திநாதனர் சன்னதிக்கு நேராக தெற்கு புறத்தில் ஒரு வாயிலும், நடராஜர் சன்னதிக்கு நேராக தெற்கு புறத்தில் ஒரு வாயிலும் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் எம்.முத்தையா ஸ்தபதி அளித்த கடிதத்தில், ""சிற்ப சாஸ்திர நூல்களில் மகா மண்டபம் என்பது தூண்களுடன் கூடிய சுவரில்லாத மண்டபமாகவும் அல்லது தூண்களும் மற்றும் சுற்றிலும் சுவர்களும், அதில் நான்கு பக்கம் வாயில்களும் அல்லது விருப்பபட்ட திசையில் வாயில்களும் இருக்கலாம். இக்கோயிலில் தற்போது இருக்கும் பழைய வாயிலையே உபயோகித்து கொள்ளலாம். புதியதாக வாயில்கள் அமைக்க கூடாது என பக்தர்கள் விரும்புவதால் புதியதாக வாயில்கள் எதனையும் அமைக்காமல் தற்போதுள்ள வாயிலையே உபயோகித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இவற்றை அரசு பரிசீலனை செய்து கோயிலில் தற்போது இருக்கும் பழைய வாயிலையே உபயோகித்து கொள்ளலாம். புதியதாக வாயில்கள் அமைக்க கூடாது என பக்தர்கள் விரும்புவதால் புதியதாக வாயில்கள் அமைக்காமல் தற்போதுள்ள வாயிலையே உபயோகித்து கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதியதாக இரண்டு நுழைவு வாயில்கள் ஏற்படுத்த திருக்கோயில் இணை ஆணையருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட ஆணையரின் ஆணையை ரத்து செய்யலாம் என அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.