பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
ராசிபுரம்: சவுரிபாளையம், புனித மரிய மதலேனாள் ஆலய தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், மதியம்பட்டி அருகே, சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில், ஆடி மாத தேர் பெருவிழா கடந்த, 13ல் துவங்கியது. 17ல் இருந்து, நான்கு நாட்கள், பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. 18ல், பங்குத்தந்தை ஸ்டீபன் சொரூபன் தலைமையில், நவநாள் திருப்பலி, 21ல், திருநாள் நிகழ்வு நடந்தன. கடந்த, 22 காலை ஆயர் வரவேற்பு, ஜெப வழிபாடு நடந்தது. தேவாலயத்திற்கு வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி, புனித எண்ணெய் விளக்கு வைத்து, புனித மரிய மதலேனாளை வழிபட்டனர். தொடர்ந்து, புனித பிரான்சிஸ் சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனித மைக்கேல் சம்மனசு ஆகிய சிலைகளுக்கு, உப்பை கொட்டி வழிபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, புனித மரிய மதலேனாள் அன்னையின் அலங்கார தேர் பவனி நடந்தது. ஐந்து தேர்கள், மின் விளக்கு மற்றும் வண்ண காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி பவனி வந்தது. கையில் மெழுகு வர்த்தி ஏந்தி, தேரின் முன் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்து ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை, மரியன்னையின் முன் மண்டியிட வைத்து, உச்சிமுடியை பிடித்து, மெழுவர்த்தியால் தீயிட்டு அழித்தனர். பின்னர், பக்தர்கள் பங்குத்தந்தையின் ஆசி பெற்றனர்.