பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
ஈரோடு: டிரஸ்டி பிரச்னையால், ஈரோடு கள்ளுக்கடைமேடு ஆஞ்சனேயர் கோவிலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால், பொதுமக்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் வ.உ.சி., பார்க் ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல், கள்ளுக்கடை மேட்டிலும் ஆஞ்சநேயர் கோவில் அமைக்க, எட்டு பேர் கொண்ட குழுவினர் முடிவெடுத்தனர். அதன்படி, கள்ளுக்கடை மேடு பகுதியில் வசிக்கும் மக்களிடம் வசூலித்த பணத்தில், 1990ல் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. கள்ளுக்கடைமேடு காஜாமைதீன் வீதியை சேர்ந்த தேவராஜ், வெங்கடேசன், கந்தசாமி, முருகன், தர்மராஜ், அன்பழகன், ரவி, பெரியசாமி ஆகிய எட்டு பேரும் கோவிலை நிர்வகித்து வந்தனர். இதில் வெங்கடேசன் என்பவர், கோவில் கணக்குகளை பார்த்து வந்தார். கோவில் கணக்குகளில் தொடர்ந்து மோசடி செய்ததால், மற்ற ஏழு பேரும், வெங்கடேசனை டிரஸ்டியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். கோவில் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடக்கவிருந்தது. இதனிடையே, நேற்று மாலை கோவிலுக்கு வந்த வெங்கடேசன் தரப்பினர், பூட்டு போட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பும், கோவில் அர்ச்சகரும் தங்கள் பங்குக்கு பூட்டு போட்டனர். மூன்று பூட்டு போட்டு கோவில் பூட்டியிருப்பதை பார்த்து பக்தர்களும் வருத்தமடைந்தனர். தேவராஜ் கூறுகையில், ""ஆஞ்சநேயர் கோவில் கணக்கில், வெங்கடேசன் மோசடியில் ஈடுபட்டார். கோவிலுக்குள் தேவையில்லாமல் கண்காணிப்ப கேமராவை வெங்கடேசன் பொருத்தியுள்ளார். எனவே, அவரை டிரஸ்டியில் இருந்து நீக்க மற்ற ஏழு பேரும் முடிவெடுத்தோம். நாளை (இன்று) புதிய பொறுப்பேற்க இருந்த நிலையில், கோவிலுக்கு வெங்கடேசன் தரப்பினர் பூட்டு போட்டுள்ளனர். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி நடப்பதாக கூறி பொதுமக்களிடம் வெங்கடேசன், பணம் வசூலித்து வருகிறார். நாளை (இன்று) அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்க உள்ளோம், என்றார். பக்தர்களின் புகாரின் பேரில், விரைந்து வந்த போலீஸார், கோவில் பூட்டை திறந்தனர். இரு தரப்பினருடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.