பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
திருப்பூர் : ராவணனை வதம் செய்வதற்காக ராமன் பூமியில் அவதரிக்கவில்லை; கீழ்நிலையில் இருக்கும் மனிதனை வாழ்வில் மேல்நிலைக்கு உயர்த்துவதற்காகவே பகவான் மானிடனாக அவதரித்தார்; சரணடைந்தால் போதும்; பகவான் நம்மை மேல்நிலைக்கு உயர்த்துவான், என சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார். திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, "கம்பனின் கதாபாத்திரங்கள் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடக்கிறது.சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசியதாவது:ராமாயணம் ராமனின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதற்காக எழுதப்பட்டது அல்ல. வரலாற்றை கூறுவதாக இருந்தால், ராமோதந்தம் (உதந்தம்- வரலாறு) என்று பெயர் வைத்திருப்பார், கம்பர். ராமாயணம் என்பதை, ராம அயனம் (வழி) என்று பிரித்தால், ராமன் பின்பற்றிய வழியை கூறும் நூல் என்ற உண்மையை உணரலாம். அதேபோல், ராவணனை அழிப்பதற்காகவே ராமன் அவதரித்தார் என்பதும் தவறு; ராவணனை அழிக்க ராமன் அவதாரிக்கவில்லை. ராவணன் உட்பட அசுரர்கள் பாவம் என்கிற கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டு, ராமன் என்கிற குளத்தில் வீழ்ந்து தானாகவே மடிந்தனர். "கூற்றின் வாய் வீழ்ந்த கும்பகர்ணன் என்ற பாடல் மூலம் நாம் இதை தெரிந்துகொள்ளலாம்.நம்மாழ்வார், ஆண்டாள் ஆகிய இருவர் மட்டுமே ராமாவதார நோக்கத்தை அறிந்திருந்தனர். நமக்கு உடமைப்பட்ட பொருள் தொலைந்து விட்டால், நாம் அதை தேடி எடுப்போம். ஜீவாத்மாவாகிய மனிதன் பரமாத்மாவாகிய பகவானுக்கு உடமைப்பட்டவர்கள். பூமியில் பிறந்த தனக்கு உடமைப்பட்ட மனிதனை கீழ்நிலையில் இருந்து உயர்த்தி, மேல்நிலைக்கு கொண்டு செல்வதற்காகவே மனம் இறங்கி, மானிடனாக அவதரித்தார்.அயோத்தியை சிறப்பாக ஆண்டு வந்த தசரதன், குரு வசிஷ்டரிடம் தனக்குபின், நாட்டை ஆள ஓர் மன்னன் வேண்டும் என்று வேண்டினான். புத்ரகாமேஷ்டி யாகம் நடத்தப்பட்டது; புணர்வசு நட்சத்திரத்தில் ராமன் பூமியில் அவதரித்தார். புணர்வசு நட்சத்திரத்தில் பிறந்தால் இழப்புகள் வரும்; இழந்ததை திரும்ப பெற்றுக்கொள்ளவும் முடியும். எனவேதான், அந்த நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து அவதரித்தார், ராமன்.ராமனின் திரு உருவத்தை கூறும்போது, "இருகை வேளத்து ராகவன்... என்கிறார் கம்பர். ராமனின் இரு கைகளும் யானையின் துதிக்கை போன்று நீண்டவை என்பது பொருள். பகவானுக்கும் யானைக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. யானையை பார்க்க பார்க்க எப்படி சலிப்பு ஏற்படாதோ, அதேபோல், இறைவனை பார்க்க பார்க்க நமக்கு அலுப்பு ஏற்படுவது இல்லை. கால் பிடிப்போர் தம்மை மேல் உயர்த்துவது யானையின் குணம்; அதுபோல், பாதம் பிடிப்போரை (சரண் அடைவோரை) வாழ்வில் உயர்த்துபவர் இறைவன். கை, கால் இல்லாதவர்கள்கூட, யானையின் அருகில் சென்றால்போதும், தனது தும்பிக்கையால் தலைக்குமேல் தூக்கி வைக்கும். மனிதர்களாகிய நாம்மிடம் யாகம், வேதம் போன்ற உறுப்புகள் இல்லாவிட்டாலும், மனதில் தூய பக்தி இருந்தால் பகவான் நம் வாழ்வை மேல்நிலைக்கு உயர்த்துவார். ராமன் பிறந்ததும் பெயர் வைப்பதற்காக வசிஷ்டரை வேண்டினார் தசரத சக்கரவர்த்தி. முக்காலமும் உணர்ந்த வசிஷ்டர், தெய்வ வடிவான அந்த பிள்ளைக்கு "ராமன் என்று பெயர் சூட்டினார்."ராம என்ற எழுத்தில் வரும் "ரா என்பது அஷ்டாச்சர மந்திரத்தின் (வைணவம்) ஓரெழுத்து; "ம என்பது ஓம் என்கிற பஞ்சாட்சர மந்திரத்தில் (சைவம்) இருந்து எடுக்கப்பட்டது. சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்துவதே "ராமன் என்கிற திருநாமத்தின் தனிப்பெரும் சிறப்பு.இவ்வாறு, நாகை முகுந்தன் பேசினார்.