பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
வாழப்பாடி : வாழப்பாடி அருகே, பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் கோவிலை, 18.50 லட்சம் ரூபாயில் புதுப்பிக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில், புராணங்களில் இடம் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. அந்நதிக்கரையில், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பஞ்ச பூத சிவன் திருத்தலங்கள் அமைந்துள்ளன. அதில், முதல் தலமான பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலும், இரண்டாவது திருத்தலமாக ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் கோவிலும் இடம்பெற்றுள்ளது. பிரம்மாண்டமான ராஜகோபுரம், அரண்மனை போன்ற மதில் சுவர்கள், விசாலமான மண்டபம் என பல்வேறு கட்டிடக்கலை சிறப்பம்சங்களுடன் வானுயர்ந்து காணப்படும் சாம்பவமூர்த்தீஸ்வரர் கோவில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. கோவில் திருத்தேர்களும் மட்கி மண்ணோடு மண்ணாகியது. எனவே, சாம்பவமூர்த்தீஸ்வரன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில், கோவிலை புதுப்பிக்க தமிழக அரசு, 18.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி கோவிலை புதுப்பிக்க இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை, டெண்டர் அறிவித்துள்ளது. மூன்றாம் நிலைக்கு மேல் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 20ம் தேதி ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், கோவில் திருப்பணிக்கான டெண்டர் திறக்கப்படுவதாகவும் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அறிவித்துள்ளது. இதனால், ஏத்தாப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.