பைபிளில் நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது என சொல்லப்பட்டுள்ளது.இப்போதும் கூட நம்மில் பலர் நான் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே என்பார்கள். ஒரு செயலைச் செய்யத் துவங்கிய பிறகு பயம் எதற்கு? நல்லதைச் செய்யும் போது பயமே தேவையில்லை. ஆபத்து வருமென தெரிந்தால், ஆண்டவரின் பாதுகாப்பில் நம்மை ஒப்படைத்து விட வேண்டும். சரி என்றால் அவர் நம்மை பாதுகாப்பார். யோபு என்பவருக்கு செல்வ வளம் மிக்க பிள்ளைகள் இருந்தார்கள். யோபு, கர்த்தரே! எம் பிள்ளைகளை நீரே வழி நடத்த வேண்டும், என ஆண்டவரிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதிலாக ஐயோ! இவர்கள் வைத்துள்ள செல்வம் களவு போய் விடுமோ, அதனால் அவர்களுக்கு ஆபத்து வருமோ என பயந்தபடியே ஜெபித்தார். இன்னும் ஒரு படி மேலாக போய், என் பிள்ளைகளை நான் இழந்து விடுவோனோ எனவும் கூறினார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்காத இந்த ஜெபத்தின் விளைவு, அவர் நினைத்தபடியே நடந்தது. நாம் கடவுளிடம் மிகக் கடுமையான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கும் அளவுக்கு அவரிடம் விசுவாசம் காட்டுவதில்லை. பயத்திலேயே சாகிறோம். இனியேனும் பயம் கொள்ளாதீர்கள். நம் செல்வத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து ஜெபிப்போம். நன்மை நடக்கும்.