பதிவு செய்த நாள்
25
நவ
2011
11:11
ஆத்தூர்: ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், சைக்கிள், பைக்குக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள கோட்டை காயநிர்மலேஸ்வர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்கள் உள்ளன. அதில், காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பிரதோஷம், சோமவாரம், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உள்ளிட்ட அனைத்து வகையான பூஜைகளும் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு, ஆத்தூர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று பிரதோஷ பூஜைக்கு வந்த பக்தர்களிடம், பைக், மொபட் போன்ற வாகனங்களுக்கு தலா ஐந்து ரூபாயும், செருப்புக்கு இரண்டு ரூபாய் என, கட்டாய வசூல் வேட்டை நடத்தினர். அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து கேட்ட பக்தர்களிடம், குத்தகைதாரர்கள் அலட்சிய பதில் அளித்தனர். பக்தர்களின் வாகனம், செருப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்து வரும் சம்பவம் குறித்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.